காத்திருந்த ரதம்!

Date:

Share post:

காத்திருந்த ரதம்!

The waiting chariot!

ஜகன்னாதபுரி எனும் புரி திருத்தலத்தில், ரத யாத்திரை! ஜகன்னாதர் (கண்ணன்), பலராமர், சுபத்திரா ஆகியோர் மூவரும் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, குணடீச்சா சென்று ஒன்பது நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் புரிக்குத் திரும்புவார்கள்.

மூவருக்கும் தனித்தனி ரதங்கள். அந்த ரதங்கள் ஒவ்வோர் ஆண்டும் புதியவைகளாகச் செய்யப்படும். அட்சய திருதியை அன்று ரதம் செய்யும் வேலை தொடங்கி, ஏறத்தாழ இரண்டு மாத காலங்கள் நடைபெறும்.

அலங்காரத்திற்கு, நூறு மீட்டர் துணி பயன் படுத்தப்படுகிறது. எழுபத்தாறு மீட்டர் நீளமும் இருபத்தோரு செ.மீ. விட்டமும் உள்ள, நான்கு கயிறுகளால் ஒவ்வொரு ரதமும் இணைக்கப்படும்.

இரண்டாயிரத்து நூற்று எண்பத்தெட்டு பகுதிகள் மரத்தால் செதுக்கப்பட்டு, மூன்று ரதங்கள் உருவாக்கப்படும்.

ஜகன்னாதரின் ரதம் நந்திகோஷா (கருடத்வஜா அல்லது கபித்வஜா என்றும்) அழைக்கப்படும். பலராமர் ரதம் தாலத்வஜா என்றும் சுபத்திரையின் ரதம் தேவ தளனா என்றும் அழைக்கப்படும்.

மாதலி, தாருகன், அருச்சுனன் ஆகியோர் சாரதிகளாக – தேரோட்டி களாக இருந்து அத்தேர்களை ஓட்டுவதாகச் சொல்வார்கள்.

அந்த ரதங்களில் ஜகன்னாதருடைய – கண்ணனுடைய ரதமே மிக உயரமானது. 13.5. மீ உயரம் கொண்டது. சுபத்திராவின் ரதம்தான் மிகவும் சிறியது. 12.9. மீ. உயரம் கொண்டது.

ஒவ்வொரு ரதத்திலும் நான்கு குதிரைகள் பிணைக்கப் பட்டுள்ளன. லட்சக் கணக்கான மக்கள் கூடுவார்கள். மூல மூர்த்திகள் மூவரையும் எழுந்தருளச் செய்து பவனி வரும் ரத யாத்திரை இது ஒன்றுதான்.

அலங்காரமான – ஆடம்பரமான தேர்ச்சீலைகள், இசைக்கருவிகள் முழக்கம் எனும் இத்திருவிழாவில் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் பங்கேற்றார். பங்கேற்ற அவர், தன் சீடர்களை ஏழு குழுக்களாகப் பிரித்தார்.

அந்த ஏழு குழுக்களில் நான்கு குழுக்களை ரதங்களின் முன்பாகவும், மீதி உள்ள மூன்று குழுக்களை ரதங்களின் இரு பக்கங்கள், பின் பக்கம் என வரச் செய்தார். ரதங்களுக்கு முன்னால் தானே ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் நாம சங்கீர்த்தனம் செய்தவாறு, தன்னை மறந்து நடனமாடியபடி சென்று கொண்டிருந்தார்.

கூடியிருந்த அவ்வளவு பேர்களும் நாம சங்கீர்த்தனம் பாட, பக்திப் பரவச கோஷம் ஆகாயத்தை நிறைத்தது. அவர்களை எல்லாம் வழிநடத்தும் ஸ்ரீகிருஷ்ண சைதன்யரோ, பக்திப் பரவசத்தின் உச்சத்தில் இருந்தார்.

அசையாமல் நிற்பார். திடீரெனத் துள்ளிக் குதிப்பார். குரல் தழுதழுக்கிறது; குரல் மாறுகிறது; உடம்பெங்கும் வியர்வை ஆறாகப் பெருகியது.

மெய் சிலிர்த்து உடல் ஆடுகிறது; கண்களில் கண்ணீர் அருவியாக வழிந்தது; முகத்தில் அசாதாரணமான ஓர் ஔி; கண்ணனைப் பிரிந்த பிரிவாற்றாமை தாபம்; திடீரென அளவிற்கு மீறிய ஆனந்தம் – என மாறிமாறி வெளிப்படும் உணர்ச்சிகள், ஸ்ரீகிருஷ்ண சைதன்யரை, அப்படியே மயக்கிக் கீழே தள்ளின.

மயங்கி விழுந்த ஸ்ரீகிருஷ்ண சைதன்யரைக் கைத்தாங்கலாகத் தாங்கி, வேறு இடத்திற்குக் கொண்டு சென்றார்கள். அதற்குள் உச்சிக்கால நைவேத்திய நேரம் நெருங்கியது. ‘போக்’ எனும் அறுசுவை உணவுகள் பகவானுக்கு ஏராளமாகப் படைக்கப்பட்டன.

நைவேத்தியம் முடிந்ததும் அவற்றைப் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்தார்கள். அதன் பின் மறுபடியும் ரதங்களை இழுக்க முயன்றார்கள். சொல்லி வைத்தாற்போல, ஒரு ரதம்கூட நகரவில்லை. யானைகளைக் கூட்டி வந்து, இழுக்க வைத்தார்கள்.

அப்போதும் ஒரு ரதம்கூட நகரவில்லை. அதற்குள் ஸ்ரீகிருஷ்ண சைதன்யருக்கு மயக்கம் தெளிந்தது. அவர் எழுந்து வந்தார்.

வந்தவரிடம் விவரம் சொல்லி, ‘‘என்ன வெல்லாமோ முயற்சி செய்துவிட்டோம். நகரமாட்டேன் என்கிறது ரதம். நீங்கள் வடம் பிடித்து இழுத்தால், ரதங்கள் நகரும்’’ என்றார்கள். கண்ணனை வணங்கி கைகளால் வடத்தைப் பிடித்து, இழுக்கத் தொடங்கினார் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்.

ரதங்கள் நகரத் தொடங்கின. அனைவரும் வியந்தார்கள்; கைகளைக் கூப்பி ஸ்ரீகிருஷ்ண சைதன்யரை வணங்கினார்கள். பக்திக்கு வசப்படுபவன் இறைவன் என்பது, அங்கே உண்மையானது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...