மூட் டிஸ்ஆர்டர்

Date:

Share post:

மூட் டிஸ்ஆர்டர்

மூட் டிஸ்ஆர்டர்

மனம், உணர்வுகளால் ஆன அற்புதப் பெட்டகம்.  அன்றாடம் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகள் நம் மனதைப் பாதித்தபடியே உள்ளன. நிகழ்வுகளுக்கு ஏற்ப நம் மனம் சலனம் அடைந்துகொண்டே இருக்கிறது.

ஆனந்தத்தில் கொண்டாடித் திளைப்பதும், துன்பத்தில் உழன்று, மருகுவதும் நம் சுபாவம்.  இப்படி,  சம்பவங்களுக்கு ஏற்ப எதிர்வினை செய்யும் வரை நம் மனநிலையில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால், சிலர் எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென மிகவும் சோர்வாக இருப்பார்கள். வேறு சிலரோ அதீத உற்சாகமாக இருப்பார்கள். இப்படி இயல்பற்ற தூண்டுதலால் மனநிலையில் ஏற்படும் மாறுதல்களை மனநிலை மாற்றங்கள் என்கிறோம்.

பொதுவாக, மனநிலை மாற்றங்கள் பெரும்பாலானோருக்கு ஏற்படுபவைதான். இவை இயல்பானவை. தற்காலிகமானவை.

ஆனால், இந்த பாதிப்பு மாதக்கணக்கில் தொடரும்போது அது ஒரு குறைபாடாகிறது. இதை நாம் மனநிலை பாதிப்பு (மூட் டிஸ்ஆர்டர்) என்கிறோம்.

இந்த பிரச்னை இருப்பவர்களால் அன்றாட வேலைகளைச் சரிவர செய்ய இயலாமல் போவதால், அவர்கள் மேலும் மேலும் மனதால் பாதிக்கப்படுகிறார்கள்.

மூட் டிஸ்ஆர்டர்

மூட் டிஸ்ஆர்டரை ஒருதுருவ பாதிப்பு (யூனிப்போலார் டிஸ்ஆர்டர்) இருதுருவ பாதிப்பு (பைபோலார் டிஸ்ஆர்டர்)  என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க முடியும்.   பெரும்பாலான மூட் டிஸ் ஆர்டர்களின் நோய்குறிகளும் சற்று ஏறக்குறைய ஒன்று போலவேதான் இருக்கும். கடுமையான மனச்சோர்வு, தாழ்வுமனப்பான்மை போன்ற, சோம்பல் போன்ற குணங்கள் எல்லா மூட் டிஸ் ஆர்டர்களுக்கும் பொதுவானவை.

ஏடிபிக்கல் டிப்ரசன் (Atypical depression)

பொதுவாக, டிப்ரசனின்போது சரியாகத் தூக்கம் வராமல், சாப்பிடாமல் சோர்வாக இருப்பார்கள். ஆனால் ஏடிபிக்கல் டிப்ரசன் பிரச்னை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள்.

நீண்ட நேரம் தூங்குவார்கள். அதிகமாகச் சாப்பிடுவதால் எடை அதிகரித்தல் இருக்கும். சமூகத்தோடான உறவு மிகவும் அரிதாக இருக்கும். மிகுந்த தனிமை
உணர்வோடு இருப்பார்கள்.

பருவகால மனநிலை பாதிப்பு (Seasonal affective disorder)

குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டும் மிகுந்த மனச்சோர்வோடு இருப்பார்கள். இது பொதுவாக, பனிக் காலத்தில் குளிர்பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு ஏற்படும். பருவ நிலை மாறும் போது இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள். இவர்கள் குளிர்காலங்களில் டிப்ரசனுக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல் நலம்.

துயர மனநிலை (Melancholic depression)

இந்த பாதிப்பு உடையவர்கள் எப்போதும் துயரமான மனநிலையோடே இருப்பார்கள். மிகவும் சூன்யமான மனநிலையில் தீவிரமாக இருப்பதால் இவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.   சந்தோஷப்பட வேண்டிய விஷயங்களைக்கூட மிகவும் துயரமான ஒன்றாகவே பார்ப்பார்கள். வாழ்வையே வெறுத்து விடுவார்கள். இதனால், சாப்பிடுவதில் ஆர்வம் இருக்காது. எடை இழப்பு இருக்கும். பொதுவாக, காலை வேளையில் இவர்களுக்கு மனச்சோர்வு அதிகமாக இருக்கும். இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.

கேட்டடோனிக் டிப்ரசன்  (Catatonic depression)

இது அரிதான மிக மோசமான டிப்ரசன் வகைகளில் ஒன்று. இந்த நிலையில் இருப்பவர்கள் பேச்சோ உணர்வோ இன்றி அசைவற்று இருப்பார்கள்.  வலி போன்ற உணர்வுகள் மட்டுமே இருக்கும்.


பிரசவ கால மனச்சோர்வு (Pospartum depression)

பிரசவத்துக்குப் பின் சில பெண்கள் அதீத மனச்சோர்வோடு இருப்பார்கள். எதையோ இழந்ததை போன்ற மனநிலை, விரக்தி போன்றவற்றோடு காணப்படுவார்கள். பொதுவாக,  பிரசவத்துக்குப் பிறகு மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை இந்த மனச்சோர்வு இருக்கும். இதனால், குழந்தைப் பராமரிப்பு பாலூட்டுதல் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

டிஸ்தீமியா (Dysthymia ): இதை நாட்பட்ட மனச்சோர்வு எனலாம். இதற்கு மேஜர் டிப்ரசிவ் டிஸ்ஆர்டர் போன்றே அறிகுறிகள் இருந்தாலும் இது சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து காணப்படும்.

மனச்சோர்வு ஆளுமை (Depressive personality disorder)

சிலர் இயல்பாகவே எப்போதும் மனச்சோர்வுடன், எதிர்மறையான அணுகுமுறையுடன்,  தாழ்வுமனப்பான்மையுடன் இருப்பார்கள்.  இப்படி டிப்ரசன் என்பது இயல்பான குணமாக இருப்பதை டிப்ரசிவ் பெர்சனால்டி டிஸ்ஆர்டர் என்பார்கள். இவர்களுக்கு சிகிச்சைகள் பெரிய அளவில் பயன்படாது என்றாலும், இந்த பிரச்னை முற்றி கேட்டடோனிக் டிஸ்ஆர்டராக மாறும் நிலை நோக்கி செல்லும் அபாயம் உண்டு என்பதால்,  இவர்களுக்கு அடிக்கடி மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் தரவேண்டியது இருக்கும்.

ரெக்கரன்ட் பிரீஃப் டிஸ்ஆர்டர் (Recurrent brief disorder)

மிகக் குறுகிய காலத்திலேயே திரும்ப திரும்ப மனச்சோர்வுக்கு ஆட்படுதல் பிறகு அதில் இருந்து விடுபடுதல் என்று சிலருக்கு  பிரச்னை இருக்கும். இப்படி அடிக்கடி மனச்சோர்வுக்கு ஆட்படுவதை ரெக்கரன்ட் பிரீஃப் டிஸ்ஆர்டர் என்பார்கள். பெண்களுக்கு இந்த வகை டிஸ்ஆர்டர் அதிகமாக வர வாய்ப்பு உண்டு. குறிப்பாக மாதவிலக்கு சமயங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக ஏற்படும்.

ரேபிட் மூட் டிஸ்ஆர்டர்

இதுவும், பைபோலார் டிஸ் ஆர்டரில் ஒருவகைதான். பொதுவாக, பைபோலார் டிஸ்ஆர்டர் பிரச்னை இருப்பவர்களுக்கு மேனியா மற்றும் டிப்ரசன் எபிசோட்கள் மூன்று முதல் ஆறு மாத இடைவெளியில் மாறி மாறி வரும். ஆனால், ரேபிட் மூட் டிஸ்ஆர்டர் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த எபிசோட்கள் வாரக்கணக்கில்கூட மாறிமாறி ஏற்படும்.

மதுவால் தூண்டப்படும் மனச்சோர்வு

மதுவுக்கும் மனச்சோர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆல்கஹால் மூளையில் ஏற்படும் இயல்பான வேதி வினைகளை முடக்கி, மூளையைச் சோர்வுற செய்யும் வலிமை உடையது. தொடர்ந்து மதுவைப் பயன்படுத்தும் போது அது டோபமைன் உள்ளிட்ட சுரப்புகளை பாதித்து அதீத மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.

மனநிலை பாதிப்பின் அறிகுறிகள்

உணர்வுகள் (Feelings)

1.சோகம் மற்றும் பதற்றம்
2.நம்பிக்கையின்மை
3.ஊசலாட்ட எண்ணங்கள்
4.எரிச்சல் உணர்வு.

எண்ணங்கள்

1.தன்னைத் தானே மட்டமாக நினைப்பது
2.எதிர்மறை எண்ணங்கள்
3.மோசமான நினைவாற்றல் மற்றும் கவனம்
4.முடிவுகள் எடுக்க இயலாமை
5.தற்கொலை எண்ணங்கள்.

நடத்தை (Behaviour)

1.அழுகை
2.எதிலும் பின்வாங்கும் மனோபாவம்
3.உற்சாகமின்மை
4.தோற்றம் பற்றிய கவனம் இன்மை
5.மிகக்குறைந்த அல்லது மிக அதிகமான உறக்கம்
6.அதிகமான அல்லது மிகக்குறைந்த அளவில் உண்பதால் ஏற்படும் எடை குறைவு அல்லது அதிகரிப்பு
7.வலிமை இழந்தது போன்ற நாட்பட்ட சோர்வு
8.காதல், உடலுறவில் ஆர்வம் இன்மை.

காரணங்கள்

செரடோனின் மற்றும் நாரபினாப்ரைன், டோபாமைன் (Serotonin and norepinephrine)  போன்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றத்தால் இந்த மூட் டிஸ்ஆர்ட்கள் ஏற்படுகின்றன என்று உடலியல்ரீதியாக சொன்னாலும் இந்த பாதிப்புகள் ஏற்பட தொடர் தோல்விகள், தனிமையுணர்வு, பாதுகாப்பின்மை, மோசமான அவமானம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுதல் போன்ற வாழ்வியல் காரணிகள் முக்கிய இடம் வகிக்கின்றன. சிலருக்கு மரபியல் காரணங்களாலும் மூட்டிஸ்ஆர்டர் பாதிப்புகள் ஏற்படக்கூடும். பொதுவாக, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்ற பிரச்னைகள் ஏற்பட 25 சதவிகிதம் மரபியல் காரணங்கள் பின்னணியாக உள்ளன.

யார் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்

பொதுவாக, நம் நவீன வாழ்கைமுறை மாற்றங்களால் மூட் டிஸ்ஆர்டர்கள் மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேருக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, வயதானவர்கள், தனிமையில் இருப்பவர்கள், இதய நோய்கள், புற்றுநோய், பக்கவாதம் போன்ற நாட்பட்ட பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டிஸ்ஆர்டர் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.  பெண்களுக்கு வருவதற்கு 2:1 என்ற விகிதத்தில் வாய்ப்புகள் அதிகம்.

சிகிச்சைகள்

பொதுவாக, மூட் டிஸ்ஆர்டருக்கு கவுன்சலிங் மிகவும் முக்கியம். காக்னடிவ் பிஹேவியரல் தெரப்பி என்று இதைச் சொல்வார்கள். இதில், பாதிக்கப்பட்டவருக்கு தன்னை, தான் சார்ந்து இருக்கும் சூழலை சமூகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்று கவுன்சலிங் தரப்படும். மனித உறவுகளை மேம்படுத்துவதற்கான அறிவுரைகள் தரப்படும். அவருக்கு மன நெருக்கடி ஏற்படுத்தும் நினைவுகளை, விஷயங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுத்தரப்படும்.

இதனோடு ஃபேமிலி தெரப்பி எனப்படும் பாதிக்கபட்டவரின் குடும்பத்தாருக்கும் கவுன்சலிங் தரப்படும். இதனுடன் மூட் ஸ்டெபிலைஸர்கள் எனப்படும் நியூரோடிரான்ஸ்மிட்டரை தூண்டும் மருந்து, மாத்திரைகளும் தரப்படும். பாதிக்கப்பட்டவர் கவுன்சலிங் உடன் மருந்து மாத்திரைகளையும் பரிந்துரைக்கப்பட்ட காலம் வரை எடுத்துக்கொண்டால் தான் நல்ல தீர்வு கிடைக்கும்.

சிலர், கொஞ்ச நாட்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியதும் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடுகிறார்கள். இது மிகவும் தவறு.

மனநோய் மாத்திரைகளால் பக்கவிளைவுகள் அதிகம் என்றோர் கருத்தும் தொடர்ந்து சொல்லப்படுகிறது. தற்போது,  மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி காரணமாக அதிக பக்கவிளைவுகள் இல்லாத மருந்து மாத்திரைகள் நிறைய வந்துள்ளன.

எனவே, இது போன்ற தேவையற்ற பயங்களை விடுத்து பரிந்துரைக்கப்பட்ட காலம் வரை தொடர்ந்து மருந்து மாத்திரைகள் உண்பது நல்லது. சிலருக்கு, அவசியம் எனில் எலக்ட்ரோகன்வல்சிவ் தெரப்பி (Electro convulsive therapy) எனப்படும் மின் அதிர்வு சிகிச்சையும் தரப்படுகிறது.

 

மார்கழி பூ பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/12/31/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...