ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடுங்கள்

Date:

Share post:

ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடுங்கள்

ஐப்பசி மாதத்தில்

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி, பலன்களையும் புண்ணியங்களையும் பெற்றவர்கள் ஏராளம். இந்தப் பூவுலகில், அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கிறது காவேரி மஹாத்மிய புராணம்.

துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் காவிரியில் சங்கமமாகின்றன என்பது ஐதீகம்.

பிரஹ்மா முதலான ஸகல தேவர்களும், சரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி, இந்திராணி முதலியவர்களும், தேவ ரிஷிகளும், துலா மாதத்தில் காவிரியில் நீராட  விரும்பி வருகின்றனர்.

மேலும் மஹான்களின் கதைகள், துளசியின் மஹிமை, கங்கையின் பெருமை, துளசியைக் கொண்டு பெருமாளுக்குச் செய்யப்படும் அர்ச்ச னையின் சிறப்பு, ஸாளக்ராமத்தின் ஆராதன மஹிமை, காவிரியின் பெருமை இவற்றை  யாராவது சொல்ல காதால் கேட்பவர்களும். படிப்பவர்களும்  பேறு பெற்றவர்கள்.

காவிரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா  பீஷ்மரைப் புத்திரனாக அடைந்தார்.அர்ஜுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை தரிசித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்கிறது புராணம். துலா ஸ்நானம் செய்து பிதுர் தர்ப்பணம் செய்தால் புண்ணியமும் பித்ரு ஆசியும் கிடைக்கும்.

ஜாதகத்தில் உள்ள சர்ப்ப தோஷங்கள், பிதுர் தோஷங்கள் நிவர்த்தியாகும். சகல தேவதைகளின் ஆசீர்வாதமும் கிடைக்கும்.துலாக் காவிரி ஸ்நானம் செய்பவர்கள், காவிரி ஆறுக்கு பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கும் நீர் வார்த்து, வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன்களைத் தரும்.

கணவரின் உயிரை மீட்ட சுசீலை

துலா ஸ்நான மகிமை குறித்த பின்வரும் கதை மிகவும் உருக்கமானது. சுசீலை என்ற ஒரு குணவதி இருந்தாள். அவளுடைய கணவன் பிரம்ம சர்மா. தீய ஒழுக்கங்களோடு வாழ்ந்து வந்தான். அதனால் அவன் ஆயுள் குறைந்துகொண்டே வந்தது. சுசீலை தினசரி நான்கு  காரியங்களைத்  தவறாமல் செய்துவந்தாள்.

1. காவிரியில் நீராடுவது (குறிப்பாக துலா மாதத்தில் தவறாமல் நீராடுவது).

2. நீராடி பகவானைப் பூஜிப்பது.

3. கரையில் உள்ள அரசமரத்துக்கு நீரூற்றி வலம் வந்து பூஜை செய்வது.

4. சில ஏழைகளுக்கு காவிரிக்கரையில் அன்னதானமும் செய்வது.

இதனால் அவள் புண்ணிய பலன் கூடியது. ஒருநாள் எமகிங்கரர்கள் அவள் கணவன் உயிரை எடுப்பதற்காக வந்தார்கள். ஆனால் சுசீலையைக்  கடந்து அவர்களால் செல்ல முடியவில்லை. எமனிடம் சென்று சொன்னார்கள்.

எமன் கோபத்தோடு சித்ரகுப்தனை அனுப்பினான்

சித்திரகுப்தன் எப்படியாவது பிரம்ம சர்மா உயிரைக் கவர்ந்து செல்லக்  காத்திருந்தான். அவனாலும் சுசீலையைக் கடந்து பிரம்ம சர்மாவை நெருங்க முடியவில்லை. தக்க சமயத்திற்காகக் காத்திருந்தான்.

அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்த பிரம்ம சர்மா தன் மனைவியை நோக்கி, ‘‘சுசீலை, இந்தச்  சாப்பாடு நன்றாக இருக்கிறது இரவும் சாப்பிட வேண்டும் எடுத்து வை” என்றான். இதைக் கேட்டு தன்னை  மறந்து சித்ரகுப்தன் சிரித்தான்.

அந்தச்  சிரிப்பு அசரீரியாக சுசீலையின் காதில் விழுந்தது. ஏதோ விபரீதம் நடப்பதைத்  தெரிந்துகொண்ட சுசீலை,“யார் சிரித்தது? யாராக இருந்தாலும் என் முன்னே வர வேண்டும்” என்று உரக்கச் சொல்ல அவளுடைய தவவலிமையால் சித்ரகுப்தன் சுசீலையின் முன்னால் தோன்றினான்.

ஒளி மயமான தேகத்துடன் சித்திரம் போன்ற அழகோடு இருந்த அவனைப் பார்த்து “நீர் யார்?ஏன் சிரிக்க வேண்டும்?” என்று கேட்டாள்.

தான் “சித்ரகுப்தன்” என்று சொன்னவுடன், அவனை விழுந்து வணங்க, “தீர்க்க சுமங்கலியாய் இருப்பாய்” என்று சித்ரகுப்தன் வாழ்த்தினான். அப்பொழுது சிரிப்புக்குக் காரணத்தைக்  கேட்டாள் சுசீலை.

சித்திரகுப்தன் சொன்னான்

“சாயங்காலம் உன்கணவன்  உயிர் போகப் போகிறது. அதைத் தெரிந்துகொள்ளாத உன் கணவன் சாப்பாடு எடுத்துவைக்கச் சொல்கிறானே என்று சிரித்தேன்” என்று சொல்ல சுசீலை சித்திரகுப்தனிடம் பிராயச்சித்தம் கேட்கிறாள்.

“அம்மா, நீ தினசரி காவிரியில் நீராடிய பலனைத் தந்தால் இவன் பிழைப்பான். ஆனாலும் என் தலைவன் எமராஜாவுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதனால் நான் இவனுக்கு யமஸ்துதி  சொல்லித் தருகின்றேன். அதை அவனிடம் சொன்னால் யமன் இவனுடைய ஆயுளை நீட்டித்துக் கொடுப்பார். திரும்ப இவன் உயிர் வரும்வரை இவன் உடலை ஒன்றும் செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் மறைந்தான்.

அதேநேரம் பிரம்ம சர்மா ஒரு பெரிய உணவுக் கவளத்தை  எடுத்து வாயில் அடக்கிக் கொள்ள அது தொண்டையில் சிக்கி அப்பொழுதே இறந்துபோனான். அவனை  அழைத்துச்சென்ற சித்திரகுப்தன் யமனை மகிழ்விப்பதற்காக யம ஸ்துதிகளைச் சொல்லிக் கொடுத்தான்.

“நீ யம லோகம் போனவுடன் யமராஜனை  வணங்கி இந்தத் துதிகளைச் சொல். உன் மனைவியின் காவிரி ஸ்னான பலத்தாலும், அவனை மகிழ்விக்கும் யமஸ்துதி சொன்னதாலும் உன் வாழ்நாளை நீட்டித்து அனுப்புவான்” என்று சொல்ல அவ்வாறே எமலோகம் சென்று, யமனை பணிவோடு நமஸ்கரித்து, யமஸ்துதி சொல்ல, பிரம்ம சர்மாவினுடைய வாழ்நாள் நீட்டிக்கப்பட்டது. அவனைத்  திருப்பி அனுப்பினான் யம தர்மராஜன். தூக்கத்திலிருந்து விழிப்பவனை போல எழுந்தான் பிரம்மசர்மா.

காவிரி துலா ஸ்நானம் செய்பவர்கள் சங்கற்ப மந்திரத்தோடு,
“தர்மராஜ நமஸ்தேஸ்து சாக்ஷாத் தர்ம ஸ்வரூபிணே,
தர்மிஷ்ட  சாந்த ரூபாய சத்திய ரூப நமோ நம:

என்று தொடங்கும் இந்த யமஸ்துதியையும் சொல்லலாம் என்று காவிரி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

துலா ஸ்நானம் குறித்தசுவையான செய்திகள்

1. ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும்.

2. கங்கைக்கு இல்லாத பெருமை காவிரிக்கு ஏன் என்பதை,“ எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது.

காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், கங்கையை விட புனிதமானது “ – என்று விளக்கமளித்தார் பகவான் விஷ்ணு.

3.துலா மாதத்தில் காவிரியில் நீராடி, தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும், அந்தப் பாபங்களைக் காவேரி போக்கிக் கொள்ள திருமங்கலக்குடி திருத்
தலத்திலும், மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தரவாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து போக்கிக்கொள்கிறாள்.

4. துலா மாதத்தில் இதர நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் சேர்ந்து விளங்குகின்றன. அன்று துலா கட்ட கோயில்களின்  உற்சவ மூர்த்தி களுக்கு  தீர்த்த வாரி நடத்துகிறார்கள்.

ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மகா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். அஸ்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.

 

To know about krodha bhairava

http://sindinga9news.com/en/2022/11/09/krodha-bhairava-who-reveals-the-secret-of-the-subconscious/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...